காவிரி ஆற்றில் பச்சை நிறத்தில் தண்ணீர் வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து ஆய்வு நடத்த கோரி விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவ நெல்சாகுபடி நடைபெற்றுவருவதால் மேட்டூர் அணையிலிருந்து காவிரி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் மழைபெய்து வருவதால் காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைந்த அளவு திறந்து விடப்படுகிறது.
இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் பச்சைகலரில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதை பார்த்த பொதுமக்கள் வழக்கம் போல் இது பாசி படர்ந்து வரும் தண்ணீர் என அலட்சியமாக இருந்தனர். ஆனால் தொடர்ந்து பச்சைக்கலரில் தண்ணீர் வருவதால் ஆற்றில் குளிக்க வருபவர்கள் இந்த பச்சை கலர் தண்ணீரை பார்த்து அதிர்ச்சியடைந்து குளிப்பதை தவிர்த்து வந்தனர். ஆற்றிலிருந்து வாய்கால் பாசனத்திற்கும், செல்லும் தண்ணீர் பச்சையாகவே வருவதால் இதை வயல்களுக்கு பாய்ச்சலமா என்கிற குழப்பமும் ஏற்பட்டது. இது விவசாயிகள் இடையே பெரிய அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் விவசாயி சங்க பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். காவிரியில் பச்சை கலரில் தண்ணீரா என அதிர்ச்சியடைந்து உடனே விசாரிக்கவும், ஆய்வு செய்யவும் உத்தரவிட்டார்.
ஸ்ரீரங்கம் தாசில்தார் கனகமாணிக்கம், நீர்பகுப்பு ஆய்வு குழுவினர் வருவாய்துறையினர் என ஒரு குழு அமைப்பு ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த குழு பெட்டவாய்தலை தொடங்கி ஸ்ரீரங்கம் வரை காவிரி கொள்ளிடம் ஆறுகளில் பல இடங்களில் பகுபாய்வு சோதனைக்கு தண்ணீரை சேகரித்தனர்.
இது குறித்து அந்த பகுதி விவசாயிகளிடம் நாம் விசாரிக்கையில்… பொதுவாக ஆற்றில் தண்ணீர் புதிதாக வரும் போது நுரையூடன் சேறும், சகதியுமா தான் வரும். தற்போது பச்சைநிறத்தில் வருவது இது தான் முதல்முறை இதற்கு முன்பு இப்படி வந்தில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூரில் உள்ள காவிரி ஆற்றில் பச்சை நிறத்தில் வந்தாக சொல்கிறார்கள். ஈரோட்டில் உள்ள சாயகழிவு பட்டரையில் இருந்து கழிவுகளை சேர்த்தால் மட்டுமே இப்படி வரும் என்கிறார்கள்.
காவிரி தண்ணீர் வயல்களுக்கு மட்டும் இல்லாமல் காவிரிகரையோர மக்களுக்கு குடிநீர் ஆதராமாகவும், பல்வேறு கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கிறது. இதனால் இதை உடனே கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி ஆற்றையும், நொய்யல், அமராவதி போன்று சாயக்கழிவு கலக்கும் ஆறுகளை மாற்றிவிடமால் பாதுகாக்க வேண்டும். என்றனர்.
ஏற்கனவே திருச்சி மாநகரில் சில இடங்களில் காவிரியில் சாக்கடை தண்ணீர் கலக்கிறது என்கிற குற்றசாட்டு நீண்டநாட்களாக இருந்து வந்த நிலையில் தற்போது காவிரியில் பச்சைகலரில் தண்ணீர் வருவது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.