காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணையின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் முதல் இரண்டு லட்சத்து 10 ஆயிரம் கனஅடி உபரி நீர் கல்லணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் தற்போது மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் வழியாக பழையாறு கடலில் சென்று சேருகிறது.
தண்ணீர்வரத்து அதிகரித்ததால் மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் கரையோர கிராமங்களில் தண்ணீர் உட்புகுந்துள்ளது. நாதல்படுகை கிராமம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. தண்ணீர் சூழத் துவங்கியபோதிலிருந்தே அங்குள்ள மக்கள் படகுகள் மூலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். ஆனாலும் அங்குள்ள சிலர் கிராமத்தில் இருந்துகொண்டு வெளியேறாமல் பிடிவாதமாகத் தங்கி உள்ளனர். பாதுகாப்பான பகுதிக்கு வராமல் அங்கேயே தங்கியுள்ளவர்களில் ஒரு சிலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்து தீயணைப்பு மீட்பு படையினரும் காவல்துறையினரும் இணைந்து அவர்களை மீட்டு கரை சேர்த்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் நாதன்படுகை கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான குமார் என்பவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மீட்டு கரை சேர்த்ததோடு உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்படுவதற்கு முன்பே மீதமுள்ள மக்களும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.