தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவரும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளருமான பி.ஆர்.பாண்டியன் நிர்வாகிகளுடன் இன்று (09.09.2019) காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில், காவிரி உபரி நீர் திட்டங்களை கைவிடவும், ராசி மணல் அணை கட்ட வலியுறுத்தியும் முதலமைச்சருக்கான கோரிக்கை மனுவை சிறப்பு செயலாளர் விஸ்வநாதனிடம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 18 லட்சம் ஏக்கர் வானம் பார்த்த பூமியாக மாறி வருகிறது. கர்நாடகாவின் உபரி நீர் தான் தமிழகத்திற்கு பாசன நீராக மாறிவிட்டது. 177 டிஎம்சி தண்ணீரை ஆண்டொன்றுக்கு மாத வாரியாக விடுவிக்க வேண்டும். ஆனால் 93 டி எம்சி நீரை மட்டுமே மேட்டூர் அணை மூலம் சேமிக்க முடியும், மீத தண்ணீரை சேமித்து பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டுமானால் ராசி மணல் அணை கட்டினால் தான் சேமிக்க முடியும். அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாமல் உபரி நீர் என்று பெயர் சூட்டி கடலில் கலக்க செய்வது வேதனையளிக்கிறது.
மேலும் மேட்டூர் உபரி நீர் திட்டம் என்ற பெயரில் சட்டவிரோதமாக காவிரி டெல்டா பாசன தண்ணீரை பயன்படுத்தினால் காவிரி டெல்டா விவசாயம் அழிந்துவிடும் என எச்சரிக்கிறோம். இதனை கைவிட வேண்டும். ஏற்கனவே இருந்தது போல் மேட்டூர் முதல் காவிரி கடைமடை வரை காவிரியின் நிர்வாக அதிகாரம் முழுமையும் தஞ்சை காவிரி கண்கானிப்பு பொறியாளர் அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். பாசனப் பிரிவில் பொறியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்துள்ளோம். இதேபோல் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கோரிக்கை மனுவை நிர்வாகிகள் வழங்கி உள்ளனர் என்று தெரிவித்தார்.