சடலத்திற்கு சிகிச்சையளித்த
கோவை அரசு மருத்துவமனை!
கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். அவரது மனைவியான திவ்யாவிற்கு கடந்த வாரம் திடீரென இருதய கோளாறுடன் பக்கவாதமும் ஏற்பட்டுள்ளது. 30 வயதேயான திவ்யாவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படட நிலையில் உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எம். ஆர். ஐ. ஸ்கேன் எடுக்க வேண்டும் என பரிந்துரைத்த போது அதற்காக வருகிற 7ம் தேதி நாள் தரப்பட்டுள்ளது. இதனிடையே இன்று காலை அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு விழிகள் மேலே சென்றுள்ளன.
இது குறித்து ரங்கநாதன் அங்கிருந்த மருத்துவர்களிடம் கூறியபோது, அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஸ்கேன் எடுத்தால் சரியாகிவிடும் என கூறி அழைத்து சென்றுள்ளனர்.ஆனால் அங்கு ஊழியர்கள் இல்லாததால் பிற்பகலில் ஸ்கேன் எடுக்க திட்டமிடப்பட்டு மீண்டும் வார்டுக்கு அழைத்து வந்துள்ளனர். இதனிடையே திவ்யா பாரிதாபமாக உயிரிழந்துள்ளார். எனினும் செவிலியர்கள் அவர் உயிரிழக்கவில்லை என கூறி தொடர்ந்து சிகிசசையளித்தபடி இருந்துள்ளனர். உரிய முறையில் சிகிசசையளிக்காமல் அலட்சியப்படுத்தியதால் விலைமதிக்க முடியாத ஓர் உயிர் பிரிந்து விட்டது. ஆனால் அதை மறைக்கும் விதத்தில் சடலத்திற்கு வார்டில் வைத்து சிகிச்சையளிப்பதாக அப்பெண்ணின் கணவரான ரங்கநாதன் கண்ணீருடன் கூறினார்.
இது மட்டுமின்றி அனைத்து நோயாளிகளையும் மருத்துவர்கள் சரியாக கவனிப்பதில்லை எனவும் ஒவ்வொரு பரிசோதனைக்கும் பலமுறை அலைய விடுவதாகவும் நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.வார்டு ஒன்றில் வயதான பெண் நோயாளி ஒருவர் தரையில் பாயில் படுக்க வைத்தபடி அங்கேயே சிறுநீர் கழித்து சுகாதார சீர்கேட்டுடன் சிகிச்சை பெற்றுவரும் காட்சி மருத்துவமனையின் சுகாதார பராமரிப்புக்கு உதாரணமாக உள்ளது. நோய் தீர்க்க செல்லும் நோயாளிகள் வேறு நோயை பெற்று வரும் அவலத்தை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலுத்துள்ளது.
- அருள்