சேலத்தில், பொங்கல் விழாவையொட்டி ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட பரிசுத்தொகுப்பில் பலருக்கு முந்திரி, திராட்சை, கரும்பு ஆகியவை விடுபட்டுள்ளதாக ரேஷன் அட்டைதாரர்கள் புகார் கிளப்பியுள்ளனர்.
தமிழகத்தில் பொங்கலையொட்டி, அரிசி வாங்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் ரொக்கத்துடன், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், ஒரு முழு நீள கரும்பு ஆகியவை கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் 2.06 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இப்பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, 10.12 லட்சம் அட்டைதாரர்களுக்கு 1,583 ரேஷன் கடைகள் மூலம் பரிசுத்தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், விடுபட்ட கார்டுதாரர்களுக்கு ஜன.18ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பொங்கல் பரிசுத்தொகுப்பில் பல ரேஷன் கடைகளில் பச்சரிசியும், சர்க்கரையும் மட்டும் வழங்கப்படுகிறது என்றும், முந்திரி, திராட்சை, கரும்பு ஆகியவை முறையாக வழங்கப்படுவதில்லை என்றும் மக்களிடம் பரவலாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் பல இடங்களில் கார்டுதாரர்களுக்கும் ரேஷன் விற்பனையாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சேலத்தில் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் பரவலாக இப்பிரச்சனை எழுந்துள்ளது. ரேஷன் ஊழியர்கள் தரப்பில் கேட்டபோது, “கரும்பு போதிய அளவில் லோடு வரவில்லை என்பதால் பொங்கல் பொருள்கள் மற்றும் ரொக்கத்தை மட்டும் கொடுத்து அனுப்பினோம்” என்றனர். மேலும், பொங்கல் பரிசுத்தொகுப்பு அடங்கிய பைகள் சிலவற்றில் முந்திரி, திராட்சை பொட்டலங்கள் போடப்படாமல் விடுபட்டுள்ளது. “எங்களுக்கு என்ன சரக்கு அனுப்பி வைக்கப்பட்டதோ அதைத்தான் கொடுக்கிறோமே தவிர, அவற்றில் ஒன்றிரண்டு காணாமல் போனால் நாங்கள் பொறுப்பேற்க முடியாது,” என புலம்பினர்.
இதுகுறித்து வட்ட வழங்கல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''அரசு அறிவித்தபடி பொங்கல் பரிசுத்தொகுப்பு முழுமையாக விநியோகம் செய்யும்படிதான் ரேஷன் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சில பரிசுத்தொகுப்பில் முந்திரி, திராட்சை அல்லது கரும்பு விடுபட்டு இருந்தால் அதுகுறித்து உயரதிகாரிகளுக்கு உரிய தகவல் அளித்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சப்ளை செய்யப்படும். இது தொடர்பாக புகார் வராதபடி ஊழியர்கள் செயல்பட வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது'' என்றார்.