கரோனா பரவலைத் தடுக்க சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளுக்கான 79 சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தமிழகம் முழுவதும் சித்த மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவமனைகளை அமைக்க உத்தரவிடக் கோரி பி.ஏ.ஜோசப் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். தற்காலிக தீர்வும், பக்க விளைவுகளும் தரும் அலோபதி மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்யும் மத்திய - மாநில அரசுகள், சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு சுகாதாரத்துறையின் அறிக்கையை அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், இரண்டாவது அலை தணிந்தபோதும், அண்டை மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும், தமிழகத்தில் 64 சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் உட்பட இந்திய மருத்துவ முறைகளுக்கான 79 சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஆரோக்கியம் என்ற சிறப்புத் திட்டம் மூலம் சித்த மருத்துவ முறையிலான கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், அமுக்கரை லேகியம் போன்ற எதிர்ப்பு சக்தி அதிகரிப்பிற்கான மருந்துகள் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழ்நாடு அரசே சித்த மருத்துவம் மூலம் கரோனா தடுப்பு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், போதுமான சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்திருப்பதால், நீதிமன்றம் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை எனக் கூறி, ஜோசப் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்தனர்.