நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.