நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில் விசாரணையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொடநாடு கொலை வழக்கில் ஏற்கனவே தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் இதில் மேலும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையானது நடைபெற்ற நிலையில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அண்மையில் சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் விவாதத்தின் போது பொள்ளாச்சி சம்பவம், கொடநாடு சம்பவங்களில் திமுகதான் நடவடிக்கை எடுத்து வருகிறது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொடநாடு வழக்கு தொடர்பாக சசிகலாவிடமும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறு குட்டி மற்றும் எடப்பாடி பகுதியை சேர்ந்த ஜோதிடர் ஒருவரையும் விசாரிக்கத் திட்டமிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மே முதல் வாரத்தில் முறையாக சம்மன் அனுப்பி விசாரணை நடத்த இருப்பதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் விபத்தில் உயிரிழந்த கார் ஓட்டுநர் கனகராஜுடைய ஜோதிடர் ஒருவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு எடுத்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி இரவு இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றது. 28ஆம் தேதி கனகராஜ் சொந்த ஊருக்கு செல்லும் பொழுது விபத்தில் உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழப்பதற்கு முன்னதாக, மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சென்று கனகராஜ் சென்று எடப்பாடி பகுதியை ஜோதிடர் ஒருவரை சந்தித்ததாகவும் அந்த ஜோதிடர் கனகராஜ் ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்றும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கனகராஜ் மனைவியிடம் விசாரித்த பொழுது இந்த தகவல் தெரியவந்தது. அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறையினர் ஜோதிடரிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.