கோவில் திருவிழா என்றால் கலாட்டா செய்வதற்கென்றே சிலர் வந்துவிடுவார்கள். திருவிழாவின்போது ஊர் நிம்மதியையும் கெடுத்துவிடுவார்கள். அப்படியொரு சம்பவம் ராஜபாளையத்தில் நடந்துள்ளது.
ராஜபாளையம், தெற்கு மலையடிப்பட்டி, அண்ணா நகரிலுள்ள கண்ணபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா இரண்டு நாட்கள் நடந்தது. திருவிழா முடிந்ததும் மைக் செட்டை நிறுத்திவிட்டு ஊர்ப் பொறுப்பாளர்களிடம் வரவு செலவு கணக்கு காண்பிப்பதற்கு கோவிலில் இருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தார் ஊர்த்தலைவரான குருசாமி.
அப்போது அங்கு வந்த காளீஸ்வரன், மகாராஜன், சதீஷ்குமார், பால்பாண்டி ஆகியோர் குருசாமியை வழிமறித்து திட்டியதோடு, “மைக் செட் போடுடா.. நாங்க ஆடணும்டா..” என்று தகராறு செய்துள்ளனர். இதைப் பார்த்து அங்கிருந்த விழா பொறுப்பாளர்களும் பெண்களும் “ஊர்த்தலைவரை இப்படி அசிங்கமா பேசலாமா?” என்று தட்டிக்கேட்டுள்ளனர். உடனே அந்த நால்வரும் பெண்களை அவமானப்படுத்தும் விதத்தில் அசிங்கமாகப் பேசி, திருவிழாவிற்கு கட்டியிருந்த டியூப் லைட்டுகளை உடைத்துள்ளனர். அவர்களை சிலர் பிடிக்க முற்பட்டபோது “யாராவது கிட்ட வந்தீங்கன்னா கொல்லாம விடமாட்டோம்..” என்று மிரட்டியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஊர்ப் பொறுப்பாளர்கள் கலந்து பேசிவிட்டு ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகாரளிக்க, காளீஸ்வரன், மகாராஜன், சதீஷ்குமார், பால்பாண்டி ஆகிய நால்வர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது.