தமிழகத்திற்கு 8-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கிழக்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும், இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. உருவாகும் புயலானது தென்மேற்கு வங்கக்கடல் நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 8-ம் தேதி காலையில் வட தமிழ்நாடு-புதுச்சேரி-தெற்கு ஆந்திரா கரையொட்டிய பகுதியை நோக்கி புயல் நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.