இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கோயிலில் தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் கடந்த வாரம் பழனி மலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த கடைகள் அகற்றப்பட்டு அங்கிருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு அகற்றப்பட்ட கடைகளில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சரவணன் என்பவர் கடையும் இருந்துள்ளது.
இதனால் சரவணன் தனது ஆதரவாளர்களுடன் கோவில் இணையர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதுகுறித்து உதவி ஆணையர் லட்சுமி போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் கோவில் இணையர் அலுவலகத்தில் புகுந்து உதவி ஆணையர் லட்சுமியிடம் தகராறில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி சரவணன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.