கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய ஒரு போஸ்டர் பரபரப்பை கிளப்பி இருந்தது. "ஜனவரி 17 ந் தேதி பீர் குடிக்கும் போட்டி" என்ற போஸ்டர் தான் அது. ஆபத்தான இந்த போட்டியை தடை செய்ய வேண்டும். போட்டி நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பிலும் அழுத்தம் ஏற்பட்டது.
இந்த போஸ்டர் வெளியான நிலையில் புதுக்கோட்டை மாவட்ட போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தேடத் தொடங்கினர். போலீசாரின் தேடலில் கறம்பக்குடி தாலுகா வாணக்கன்காடு கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் பிரமுகரான கணேசமூர்த்தி (38) என்பது தெரிய வந்தது. போலீசார் தேடும் போது சபரிமலையில் இருந்தவர், இன்று காலை வீடு வந்து சேர்ந்தார். அவரை வடகாடு போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
அதில், கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி விளையாட்டாக இந்த போஸ்டரை தயார் செய்து 6 பேர்கள் மட்டுமே உள்ள வாட்ஸ் அப் தளத்தில் பகிர்ந்தேன். அதை யாரோ சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துவிட்டனர். இது போல எந்த போட்டியும் நடத்தவில்லை. நடத்தவும் மாட்டோம் என்று கூறியுள்ளார். தொடர்ந்து மக்களை பீதிக்குள்ளாக்கிய போஸ்டர் வெளியிட்ட கணேசமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த போஸ்டரை இனிமேல் யாரும் பகிர வேண்டாம் என்றும் மீறி பகிர்ந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.