கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் வேலையின்றி வருமானம் இல்லாமல் உணவுக்காக அவதிப்படும் மக்களுக்கு தன்னார்வலர்கள் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்த உதவிகளை நேரடியாக செய்யக்கூடாது என்று அரசு சொன்னாலும் பிறகு அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி திமுக எம்எல்ஏவும், தெற்கு மாவட்ட செயலாளரும் பொறுப்பாளருமான முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி உள்ளிட்ட திமுகவினர் பொன்னமராவதி வட்டாட்சியரிடம் 200 நிவாரண பைகளை கொடுத்து ஏழை மக்களுக்கு வழங்க கொடுத்தனர்.
நிவாரண பொருட்களைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் அடுத்த நாளே நிவாரணம் வழங்க அதிமுக மாவட்ட செயலாளரும் வாரியத் தலைவருமான வைரமுத்துவை வைத்து, திமுகவினர் வழங்கிய நிவாரண பைகளை வழங்க வைத்தனர். இதைப் பார்த்த திமுக தொழில்நுட்ப பிரிவினர் குழந்தை பிறப்பும் இன்சியலும் என்றும் பல கருத்துகளை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்திருந்தனர். இதைப்பார்த்த அதிமுகவினர் எதிர் விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில்தான் திமுக தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் இளையராஜா மீது கே.புதப்பட்டியில் அதிமுகவினர் கொடுத்த புகாரின் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து இளையராஜாவை தேடி வருகின்றனர். இந்த புகாரையடுத்து எங்க கட்சித் தலைவர்களை பற்றி சமூக வலைதளங்களில் இழிவாக பதிவுகள் போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவினர் மீது அரிமளம் காவல்நிலையத்தில் திமுக பேரூர் செயலாளர் நாசர் கொடுத்த புகாரை போலீசார் வாங்கவில்லை. அதனால் காவல் உயர் அதிகாரிகளுக்கு மெயில் மூலம் புகார் அனுப்பியுள்ளார்.
இது குறித்து மாவட்ட செயலாளர் ரகுபதி எம்எல்ஏ கூறுகையில் "நாங்கள் கொடுத்த நிவாரண பொருட்களை அதிமுகவினர் கொண்டு போய் கொடுப்பது நியாயமா? எங்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் திமுக தலைவர்கள் மிது அவதூறு மீம்ஸ்கள் பதிவிட்டவர்கள் மீது நடடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏனோ? என கேள்வி எழுப்பினார். இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுவருகிறது.