திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக உரையாற்றினார். நடப்பு அரசியலில் தொடங்கி வரலாற்று சம்பவங்கள் பலவற்றை தன்னுடைய உரையில் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, " நாம் அனைவரும் ஒரு தாய்மக்கள் என்று பேசுவது தேச விரோதமா? அல்லது ஒரே நாடு, ஒரே மொழி என்று பேசுவது தேச விரோதமா? இன்று இந்தியா முழுவதும் பேச வேண்டிய கேள்வி இதுதான். சமூக நல்லிணக்கத்தை கெடுப்பது, மாநில உரிமைகளை பறிப்பது என இந்திய நாட்டுக்கு 2 மாபெரும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. சமூக நல்லிணக்கத்துடன் இந்தியா இருப்பதை ஒரு சிலர் விரும்பவில்லை" என்றார்.
மேலும் பேசிய அவர், " மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது இந்த நாட்டிற்கு காந்தி நாடு என பெயர் வையுங்கள் என கூறியவர் தந்தை பெரியார். அவர் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய காலத்தில் அவரோடு இணைந்து பணியாற்றியவர் தோழர் ஜீவானந்தம். காந்தியும், ஜீவாவும் சந்தித்த சிவகங்கை மாவட்டம் சிராவயல் என்ற இடத்தில் விரைவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்" என்றார்.