ஸ்ரீவில்லிப்புத்தூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் சார்பதிவாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி (55). இவர் ஸ்ரீவில்லிப்புத்தூரில் சார்பதிவாளராக பதவி வகித்து வருகிறார். இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான இன்பத்தமிழன் மீது கடந்த 16ஆம் தேதி நகர் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.
அவர் அளித்த அந்த புகாரில், “கடந்த மாதம் 21ஆம் தேதி முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் என்னை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அவர், ஒரு நபரை அனுப்புவேன் அவரிடம் ரூ.10,000 கொடுத்து அனுப்ப வேண்டும் என்று கூறினார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து பணம் தர முடியாது என்று கூறிவிட்டு தொலைப்பேசியை துண்டித்துவிட்டேன். உடனே சிறிது நேரத்தில் எனது அலுவலகத்தில் இன்பத்தமிழன் வந்தார். மீண்டும் பணம் தர வேண்டும் என்று என்னிடம் வற்புறுத்தினார்.அப்போது நான், அரசியல் கட்சிக்காரர்களுக்கு பணம் தர முடியாது என்று உறுதியாக கூறினேன். ஆனால், அவர் பணத்தை தரவில்லை என்றால் உங்களை லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட துறைகளில் புகார் செய்வேன் என்று மிரட்டினார்.
அரசு ஊழியலரான நான் இதுவரை எந்த தவறும் செய்யவில்லை. அப்படி இருக்கையில், தேவை இல்லாமல் என் மீது புகார் அளித்து மிரட்டும் இன்பத்தமிழன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார். அவர் அளித்த இந்த புகாரின் பேரில் நகர் காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.