ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டுகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.3.2024) புதுக்கோட்டை மாவட்டம் வானக்கண்காடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அரசு அனுமதியும் பெறாமல் 50 க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடப்பதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்த போது ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.
இதனையடுத்து வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை (எ) சுந்தராஜ், ராஜேஷ், ராம்குமார், அஜித், ஸ்ரீதரன், வீரையா கருக்காகுறிச்சி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜன் ஆகிய 10 பேர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.