குழந்தைகளை பள்ளி வாகனங்களில் அனுப்பிவிட்டு நம் வேலை முடிந்து விட்டது என்று இருக்கக் கூடாது. பெண் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பெற்றோர்களுக்கு நீதிபதி அறிவுரை கூறினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த ஒரு விழாவில், அம்மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான மகிழேந்தி தலைமை தாங்கி பேசியதாவது:-
பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக பெண் குழந்தைகளை பெற்றோர்கள் கவனத்தோடு பார்த்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து பெற்றோர்கள் எடுத்து சொல்ல வேண்டும்.
பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது விலை உயர்ந்த ஆபரணங்களை அணிவித்து செல்ல அனுமதிக்கக் கூடாது. குழந்தைகளை பள்ளி வாகனங்களில் அனுப்பிவிட்டு நம் வேலை முடிந்து விட்டது என்று இருக்கக் கூடாது. அவர்கள் பள்ளிக்கூடத்திற்கு சரியாக செல்கிறார்களா என்று கவனிக்க வேண்டும்.
குழந்தைகளிடம் முகம் தெரியாதவர்கள் தவறான விஷயம் கூறினால் அதனை குழந்தைகள் உடனே தங்களுடைய பெற்றோர்களிடமோ அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையம், 1098 என்ற எண்ணிற்கோ, நீதிமன்றத்திலோ, நீதிமன்றத்தில் இயங்கி வரும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அல்லது வட்ட சட்டப்பணிகள் குழு அலுவலகத்திலோ புகார் தெரிவிக்கலாம்.
பெண் குழந்தைகளை கூடுமான வரையில் நன்றாக படிக்க வைக்க வேண்டும். 18 வயதுக்கு முன்பு பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து கொடுப்பது பெற்றோர்களுக்கு தண்டனைக்கு உரிய செயலாகும். இவ்வாறு பேசினார்.