விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுக்கோட்டை என்ற கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நாய் சடலம் கிடந்ததது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதியில் இருந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவுகள் இருந்தது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சிவகாசி அருகே புதுக்கோட்டை என்ற கிராமத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நாய் சடலம் கிடந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவி காளீஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் எம்.புதுப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து இது தொடர்பாக நான்கு பேரிடம் இன்று காலையிலிருந்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், அதே ஊரைச் சேர்ந்த அய்யனார் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்தான் இறந்த நாயை மேலே கொண்டுசென்று தொட்டிக்குள் போட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
அய்யனார் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த நாயை தூக்கிக்கொண்டு தண்ணீர் கொடுப்பதற்காக மேலே சென்றதாகவும், அப்பொழுது அந்த நாய் தவறி தொட்டிக்குள் விழுந்ததாகவும் அய்யனார் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.