நெல்லையின் நான்கு வழிச்சாலையில் இன்று (04/12/2021) காலை 10.30 மணியளவில் நாகர்கோவிலிலிருந்து தூத்துக்குடி நோக்கிச் செல்லும் கார் ஒன்று விரைந்துவந்திருக்கிறது. அது சமயம் நான்கு வழிச்சாலையின் எதிரே ரெட்டியார்பட்டி விலக்கு அருகே இரண்டு பேர் டூவீலரில் வந்திருக்கிறார்கள். அந்த நேரம் எதிர்பாராத விதமாக டயர் வெடித்ததில் நிலைகுலைந்த கார், வந்த வேகத்தில் பக்கத்திலுள்ள தடுப்புச் சுவரையும் தாண்டி எதிரே வந்த டூவீலர் மீது மோதியதில், அதில் வந்த இரண்டு இளம்பெண்களும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருக்கின்றனர். காரை ஒட்டிவந்தவர் படுகாயமடைந்திருக்கிறார். அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது அவரது உயிர் பிரிந்திருக்கிறதாகத் தெரிகிறது.
தகவலறிந்த பெருமாள்புரம் காவல்துறையினர், மாநகர காவல்துறை துணை ஆணையர் சுரேஷ்குமார் ஆகியோர் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர். விசாரணை மேற்கொண்டதில் டூவீலரில் வந்தவர்கள், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் 4ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பயிலும் மாணவிகளான திவ்ய காயத்ரி பொன் மற்றும் பிரிடா ஏஞ்சலின் ராணி என்பது தெரியவந்துள்ளது. இந்த இரண்டு மருத்துவ பயிற்சி மாணவிகளும் ரெட்டியார்பட்டியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ பணி நிமித்தம் சென்றதாகத் தெரிகிறது. அது சமயம் விபத்து நடந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், படுகாயமடைந்த டிரைவர் சண்முகசுந்தரம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்திருக்கிறார் என்கிறார்கள்.
இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.