
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே உள்ள கெடார் கிராமம், விழுப்புரம் செஞ்சி சாலையில் உள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் ராஜேஷ்(27). இவர், வீ.புதுப்பாளையம் விநாயகர் கோவில் அருகே சாலையோரம் தனது நண்பர்களுடன் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த நிஷாந்த் குமார் என்பவர் திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கி தனது காரை ஓட்டி வந்து கொண்டிருந்தார். அந்தக் கார் விநாயகர் கோவில் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக, காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் கட்டுபாட்டை இழந்த கார், சாலையோரம் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த ராஜேஷ் மீது மோதியது.
இந்த தகவலறிந்த கெடார் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜேஷை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் ராஜேஷ் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.