சென்னை நுங்கம்பாக்கத்தில் தாறுமாறாகக் காரை ஓட்டிய நபர் பைக் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் மீது தொடர்ச்சியாக மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் இன்று கார் ஒன்று அதிவேகமாக வந்தது. திடீரென அங்கிருந்த வாகனங்களின் மீது மோதியது. உத்தமர் காந்தி சாலையில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் அந்த கார் மோதிவிட்டு பறந்தது. உடனடியாக மற்ற வாகன ஓட்டிகள் அந்த காரை மடக்கிப் பிடித்தனர். அப்போது காரில் இருந்த நபர் மதுபோதையில் இருந்தது தெரிந்தது.
உடனடியாக அந்த நபர் ஒரு அடையாள அட்டையைக் காண்பித்துள்ளார். அதில் அவர் பெயர் ராஜாராம் என்றும் காவல்துறை ஆய்வாளர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த நபர் சீருடைகள் இல்லாததால் அவர் உண்மையிலேயே காவல்துறையைச் சேர்ந்த நபரா அல்லது இல்லையா எனக் குழப்பம் ஏற்பட்டது. உடனடியாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட நபரை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.