தமிழக கிழக்கு கடற்கரை கிராமப் பகுதிகளைக் குறிவைத்து அந்தப் பகுதிகள் மூலம் இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் நடப்பதும் அதேபோல இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருவதும் வழக்கமாகிவிட்டது.
இந்த நிலையில் தான், புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதிகள் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், திருச்சி மற்றும் ராமநாதபுர சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் (CIU) சோதனையில் ஈடுபட்டபோது மீமிசல் வெளிவயல் உப்பளம் அருகே நேற்று இரவு ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த அமீர் சுல்தான் என்பவரது இறால் பண்ணையில் இருந்து ரூ. 110 கோடி மதிப்புள்ள 100 கிலோ கஞ்சா ஆயில் (அசிஸ்), மற்றும் ரூ.2 கோடி மதிப்புள்ள 874 கிலோ கஞ்சா மூட்டைகள் உட்பட மொத்தமாக ரூ.112 கோடி மதிப்பிலான போதைப் பொருள் வைத்திருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்து ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
மேலும் இந்த கடத்தல் தொடர்பாக எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த இருவரையும் மீமிசல் அரசனகரிபட்டினம் பகுதியைச் சேர்ந்த இறால் பண்ணை காவலாளி முஜிபுர் ரஹ்மான் உட்பட மூன்று பேரையும் பிடித்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் விசாரணையில், இந்த போதைப் பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது? யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது? இலங்கைக்கு எந்த வழியாக யார் கொண்டு செல்ல இருந்தது என்பதும் மேலும் வேறு கஞ்சா பதுக்கல் குடோன்கள் எங்கெல்லாம் உள்ளது என்றும் விசாரணையில் தெரிய வரும் என்கின்றனர்.
மேலும், தலைமறைவாக உள்ள போதைப் பொருட்களின் உரிமையாளரைத் தேடி வருவதாக திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 112 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மத்திய சுங்கத்துறை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.