கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே திருக்கோவிலூர் போக்குவரத்து காவல் நிலையம் உள்ளது. இந்த பகுதியில் இரவு 8 மணி அளவில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தைச் சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது மேலவீதியில் இருந்து பேருந்து நிலையம் நோக்கி ஒரு இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்துள்ளனர். அப்போது அவர்கள் மூவரையும் நிறுத்தி போலீசார் சோதனை செய்ய முற்பட்டுள்ளனர். மூவரும் மது மற்றும் கஞ்சா போதியிலிருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்களின் வாகன பதிவெண்ணை வைத்து வழக்குப் பதிவு செய்ய போலீசார் முற்பட்டனர். ஆனால் போலீசாரை வழக்குப்பதிவுச் செய்ய விடாமல் போதையில் இருந்த மூவரும் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து மூவரும் அங்கிருந்து தப்பித்து தங்களின் வானகத்தை எடுத்துக்கொண்டு அதிவேகமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர், அவர்களை துரத்திச் சென்ற போக்குவரத்து உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், யூனியன் ஆபீஸ் சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் பிடித்து வாகனத்தைப் பறிமுதல் செய்ய முயற்சி செய்துள்ளனர். அப்போது போக்குவரத்து போலீசாரை மூவரும் தாக்கியுள்ளனர். பின்னர் சக போலீசார் வருவதைக் கண்டு வினோத் என்பவர் அங்கிருந்து தப்பியுள்ளார். பின்னர் உதவி ஆய்வாளரைத் தாக்கிய விக்னேஷ் மற்றும் சிபிராஜை அழைத்து வந்து திருக்கோவிலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கஞ்சா போதையில் போக்குவரத்து போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.