Skip to main content

“என் பணம் எனக்கு வரலையின்னா, நடக்குறதே வேற” - போலீசை வெட்டிய கஞ்சா கும்பல்

Published on 01/06/2024 | Edited on 01/06/2024
cannabis gang Scythe beaten policeman
கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர்கள்

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், வேலையில்லா இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அமோகமாக நடந்துவருவதாக கூறப்படுகிறது. ஆனால் கஞ்சா புழக்கத்தை முற்றிலுமாக அழித்துதொழித்து போதையில்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் நகரம் முதல் கிராமம் வரை தேடுதல் வேட்டையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். 

இதனிடையே தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம் காவல் சரகத்திற்கு உட்பட்ட சிவலார்குளம் கிராமத்தின் கஞ்சா விற்பனை நடக்கிறதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் மெத்தனம் காட்டுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அரசு மற்றும் காவல்துறையின் உயர் அதிகாரிகள் கொடுத்த அழுத்ததின் பேரில் கடந்த 28 ஆம் தேதி கஞ்சா கும்பலை குறிவைத்து சிவலார்குளத்திலிருக்கும் முத்தையா என்பவரது வீட்டிற்கு ஆலங்குளம் காவல்நிலையத்தின் ஆய்வாளர் மாதவன், எஸ்.ஐ. கோவிந்த்ராஜ் மற்றும் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.

அதில்,  விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 3 கிலோ ஆந்திரா கஞ்சா மற்றும் அதற்காக பயன்படுத்தப்பட்ட பைக் மற்றும் 2 லட்சம் ரொக்கம் வங்கி பாஸ்புக் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்,முத்தையாவின் மகன்களான மகேஷ், பெர்லின் கஜேந்திரன் மற்றும் அவர்களின் உறவினரான நவீன் உள்ளிட்ட நான்கு பேர்களையும் கைது செய்து  குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.

cannabis gang Scythe beaten policeman
கல்யாணசுந்தரம்

இந்தச் சூழலில் தம்பிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தகவல் வெளியூரிலிருந்த முத்தையாவின் மூத்த மகனான கல்யாணசுந்தரத்திற்கு தெரிய வர, உடனடியாக ஊர் திரும்பியுள்ளார். தந்தை மற்றும் தன் வழக்கறிஞருடன் அன்றைய இரவு ஆலங்குளம் காவல் நிலையம் சென்ற கல்யாணசுந்தரம், “நாங்கள் நெருக்கடி காரணமாக வீடுகட்டுவதற்காக 12 லட்சம் வைத்திருந்தோம். அதற்கான ஆதரமுமிருக்கிறது. நீங்கள் உங்கள் எப்.ஐ.ஆர்ல் 2 லட்சம் மட்டுமே கைப்பற்றியதாகக் கணக்குக் காட்டியுள்ளீர்கள் மீதி பணம் எங்கே? 2 லட்சத்தை வைத்துக்கொண்டு எங்களுடைய 10 லட்சம் பணத்தைத் தாருங்கள்” என்று கேட்டிருக்கிறார்.

பின்னர், உங்க வீட்ல 2 லட்சம் மட்டுமே இருந்தது. அதைத்தான் கைப்பற்றி வந்தோம் என்று பதில் சொன்ன போலீசாருக்கும் கல்யாணசுந்தரத்திற்குமிடையே கடும் வாக்கு வாதம் முற்றிப்போகவே அங்கிருந்த போலீசார் சிலர் கல்யாணசுந்தரத்தைச் சமாதானப்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள். ஆனாலும் ஆத்திரம் குறையாத கல்யாண சுந்தரம், என் பணம் எனக்கு வரலையின்னா, நடக்குறதே வேறன்னு. ஓங்கிய குரலில் கத்திவிட்டு வெளியேறியிருக்கிறார்.

அன்றைய தினம் இரவு 12 மணிவாக்கில் தனது உறவினரான நிர்மல்குமாருடன் பைக்கில் வந்த கல்யாணசுந்தரம் ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு ஹோட்டலின் முன்பாக நின்று நண்பருடன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஏட்டு தங்கத்துரை, கல்யாணசுந்தரம் நிற்பதை பார்த்திருக்கிறார். ஒரு வகையில் கல்யாணசுந்தரம் தனது பக்கத்து கிராமம், அதோடு தன் நண்பர் என்பதால் பேசுவதற்காக அருகே வந்திருக்கிறார்.

cannabis gang Scythe beaten policeman
தங்கத்துரை

தொடர்ந்து, “என்ன கல்யாணசுந்தரம் இந்த நேரத்தில இங்க...” சகஜமாகவே கேட்டிருக்கிறார். ஏற்கனவே தன்னுடைய வீட்டு பணம் 12 லட்சம் பறிபோக காவல் நிலைய போலீசார் காரணமானதால் அவர்கள் மீது ஆத்திரத்திலிருந்த கல்யாணசுந்தரம் பதிலே சொல்லாமல் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தங்கத்துரையின் தலையில் வெட்டிவிட்டு பைக்கில் நண்பருடன் தப்பிச் சென்றிருக்கிறார். தங்கத்துரையின் அலறல் சத்தம் கேட்டு வந்த சக போலீசார் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர்.

போலீஸ் ஏட்டு வெட்டப்பட்ட சம்பவம் அந்த பரபரப்பை ஏற்படுத்த, தப்பிய கல்யாணசுந்தரத்தை மறு தினம் மாலையே போலீசார் பிடித்துள்ளனர். மேலும் தப்பியோடிய  அவரின் கூட்டாளியான நிர்மல்குமார் தேடிவருகின்றனர்.

நாம் இது குறித்து விளக்கமறிய ஆலங்குளம் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் டி.எஸ்.பி.யையும் தொடர்புகொண்டபோது நமது அழைப்பை அதிகாரிகள் ஏற்கவில்லை. காவலர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் சுற்றுப்புற கிராமங்களில் பீதியைக் கிளப்பினாலும், கைது ரெய்ட்டிற்குச் சென்ற போலீசார், தடை செய்யப்பட்ட பொருட்களைப் பறிமுதல் செய்த நேரத்தில் உடன் பணம் தொடர்பான விவகாரத்திற்குரியவைகளைக் கைப்பற்றும் போது உரிய நபர்களின் முன்னிலையில் ஆவணப் படுத்ததாததால் இப்படியான சிக்கல் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்