சென்னை மெட்ரோவில் கஞ்சா பயன்படுத்திய புகாரில் மேலும் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த புவனேஷ் என்பவர் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் புவனேஷ் அண்மையில் சென்னை மெட்ரோ ரயிலில் அமர்ந்து பயணிகளின் முன்னிலையில் கஞ்சா பயன்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படத்தைத் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், “பரபரப்பாக இயங்கும் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்துகிறார் ஒரு இளைஞர். தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து சட்டம் ஒழுங்கு க்கு சவால் விடுகிறார்கள் போதை ஆசாமிகள். கஞ்சா 2.0, 3.0, 4.0 என வெற்று விளம்பரம் மட்டுமே செய்யும் முதல்வர் ஸ்டாலின், இனிமேலாவது சட்டம் ஒழுங்கு மீது கவனம் செலுத்துவாரா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று காலை தேனாம்பேட்டை போலீசார் புவனேஷை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய புவனேஷுக்கு கஞ்சா விற்பனை செய்த நாகேந்திரன் (26) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.