18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. மாலை 5 மணியளவிலான நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 293 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 233 இடங்களிலும், மற்றவை 17 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி அணைத்து இடங்களிலும் முன்னிலை வகித்து வருவதால் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. முன்னதாக தருமபுரி, விருதுநகரில் கடும் இழுபறி நீடித்த நிலையில், திமுக கூட்டணி தற்போது முன்னிலை வகித்து வருகிறது.
அந்த வகையில் மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சு.வெங்கடேசன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதா வெற்றி சான்றிதழை வழங்கினார். அதோடு வெற்றி பெற்ற சு.வெங்கடேசனுக்கு அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் தோல்வி அடைந்துள்ளார்.
பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக கூட்டணியைச் சேர்ந்த இந்திய ஜனநாயக கட்சியின் (ஐஜேகே) வேட்பாளர் பாரிவேந்தர் வெற்றி வாய்ப்பை இழந்தார். இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி வெற்றி பெற்றுள்ளார். பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தோல்வி அடைந்துள்ளார். தருமபுரி மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மணி வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம் தருமபுரி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி தோல்வி அடைந்துள்ளார். கடலூர் மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர் பச்சான் படுதோல்வி அடைந்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வெற்றி பெற்றுள்ளார்.