தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு ஜனவரி 28ம் தேதியிலிருந்து பல்வேறு அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். நேற்று வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள் என்பதால் ராமநாதபுரத்தில் உள்ள 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இன்று, தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. ராமநாதபுரம் 7வது வார்டில் திமுக சார்பில் பிரவீன் தங்கம் என்பவரும், அதிமுக சார்பில் சோமசுந்தரபாண்டியன் என்பவரும் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்புமனுக்கள் தேர்தல் அலுவலர் சந்திரா தலைமையில் பரிசீலனை செய்யப்பட்டது. அதில் அதிமுகவைச் சேர்ந்த சோமசுந்தர பாண்டியனின் வேட்புமனுவில் அடித்தல் திருத்தல் இருந்ததோடு, உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் அலுவலர் சந்திரா அவரது வேட்புமனுவைத் தள்ளுபடி செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் திமுக சார்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட பிரவீன் தங்கம் போட்டியின்றி வெற்றி பெறும் சூழல் உருவானதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த அந்தப்பகுதி அதிமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு வந்து தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திராவை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் அங்கு வந்த திமுகவினரும் அதிமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீசார் இரு தரப்பினரிடமும் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.