தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள கீழமை உரிமையியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள சிவில் நீதிபதி பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 12 ஆயிரம் பேருக்கு கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் நிலை தேர்வை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்தி இருந்தது. இதனையடுத்து 2 ஆயிரத்து 544 பேர் முதன்மைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து சிவில் நீதிபதி 245 பணியிடங்களுக்குத் தேர்வானவர்கள் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டிருந்தது. மேலும் இந்த பட்டியலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில், “சிவில் நீதிபதி பணியிடங்களுக்குத் தேர்வானவர்கள் பட்டியலில் இட ஒதுக்கீடு முறையில் குளறுபடி உள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களைப் பொதுப் பிரிவில் சேர்க்கவில்லை. இதனால் மற்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியன், ராஜசேகர் அமர்வு முன்பு இன்று (29.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, “தமிழ்நாடு சிவில் நீதிபதிகள் பணிக்கு தேர்வானவர்களின் தற்காலிகத் தேர்வுப் பட்டியல் ரத்து செய்யப்படுகிறது. திருத்தப்பட்ட பட்டியலை வெளியிடுமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.