'எங்களால் நிம்மதியாக ஆட்சி செய்ய முடியவில்லை; மன உளைச்சலாக இருக்கிறது' என அண்மையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசியது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அன்றிலிருந்தே கிளம்பிய புகைச்சல் தற்பொழுது வரை நீடிக்கிறது. அவ்வப்பொழுது செய்தியாளர்களைச் சந்திக்கும் தமிழிசையிடம் புதுவை முதல்வருக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இருக்கும் முரண்கள் குறித்துக் கேள்வி எழுப்பினால் ''இது வீட்டுக்குள்ள இருக்கிற சின்னச் சின்ன பிரச்சனை போன்றதுதான். இதில் மக்களைப் பாதிக்கக் கூடிய விஷயம் எதுவுமே இங்கு நடக்கவில்லை'' என்றும் ''எனக்கும் அவருக்கும் இருப்பது அக்கா தங்கை பிரச்சனைதான்'' என விளக்கங்கள் கொடுத்து வந்தார்.
இந்நிலையில், அண்மையில் தமிழகப் பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி, புதுவை முதல்வர் ரங்கசாமி தலையாட்டி பொம்மையாக இருப்பதாகப் பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில் அவரின் பேச்சுக்குப் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுவை கடற்கரைச் சாலையில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் தேசிய கல்விக்கொள்கையின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் புதுவை முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்பொழுது மேடையில் பேசிய தமிழிசை, ''தமிழகத்தின் பாடநூல் கழகத்தின் தலைவர் என்ன சொல்கிறார் என்றால், தலையாட்டும் பொம்மையாக நமது முதல்வர் இருக்கிறார் என்று சொல்கிறார். நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏனென்றால், யார் யாருக்கெல்லாமோ வாலாட்டிவிட்டு பதவியைப் பெற்றுவிட்டு நல்லதொரு திட்டங்களைக் கொடுத்த முதல்வரை அப்படிச் சொல்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்'' என்றார்.