தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடக்கவிருக்கிறது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் தேர்தல் களம் சூடாகி வருகிறது. தேர்தல் பிரசாரம் ஏப்ரல் 4 - ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பொதுவாக 48 மணி நேரத்துக்கு முன்பாக, தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்து விடும். அந்த வகையில், 4-ந்தேதி மாலை 5 மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்ய அவகாசம் இருக்கிறது. இம்முறை அந்த அவகாசம் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹூ பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, "தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான கடைசி பிரச்சார நாளான ஏப்ரல் 4-ம் தேதி கூடுதலாக 2 மணி நேரம் அனுமதிக்கப்படுகிறது. அதன்படி, அரசியல் கட்சியினர் மாலை 7 மணி வரை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளலாம். வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தப்படும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகள் முடிந்ததும் வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும்" என்றார்.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்பதால் பகல் 12 மணி முதல் 4 மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்வதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதனால்தான் பிரச்சார நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.