திருச்சியில் செயல்பட்டுவரும் தனியார் பொறியியல் நிறுவனத்தைச் சேர்ந்த இளைஞர்கள், புதுமையான சிந்தனைகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் புதுமை நிறைந்த தனித்துவத்தைத் தருவதில் வல்லமை பெற்றவர்களாக செயல்பட்டுவருகிறார்கள். இவர்களிடம் சிங்கப்பூரில் உள்ள கேமரா அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் நிறுத்துவதற்காக ஒரு கேமரா காரை வடிவமைத்து தரும்படி கேட்டுள்ளனர். இவர்களுடைய தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் உலகின் முதல் கேமரா கார், நிறுத்தி வைப்பதற்கு மட்டுமல்லாமல் இயக்குவதற்கும் ஏதுவான வகையில் உருவாக்கி அசத்தியுள்ளனர்.
இக்கண்டுபிடிப்பு குறித்து ஃபரிகேட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழினியன் கூறுகையில், “சிங்கப்பூரின் கேமரா அருங்காட்சியகத்தில் இருந்து ஒரு நூற்றாண்டு பழமையான அபூர்வ இரட்டை லென்ஸ் பெல்லோஸ் மரக் கேமராவின் மாதிரி ஒன்றை தயாரித்துத் தரும்படி எங்களை அணுகினர். அந்த அருங்காட்சியகத்தில் உள்ள கட்டடங்கள் கூட கேமராவைப் பிரதிபலிக்கும்போது இந்தக் கேமரா கார் அருங்காட்சியகத்தைப் பலரும் பார்வையிடுவதற்கு ஏதுவான வகையில் அமைத்திட வேண்டும் என்று எங்கள் குழுவினர்களோடு இணைந்து சிந்தித்தோம். இதற்கான மாதிரிகளை உருவாக்கி அருங்காட்சியகத்தில் உள்ளவர்களிடம் காட்டியபோது அவர்களுக்கு மிகவும் பிடித்துபோனது.
அதனைத் தொடர்ந்து இதனை உருவாக்கும் முழு முயற்சியில் ஈடுபட்டோம். லென்ஸ் போன்று பொருத்தப்பட்டுள்ள இரண்டு கண்ணாடிகள் மூலமாக காரை ஒருவர் இயக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2 கேமரா லென்ஸுடன் பொருந்தும் வகையில் கண்ணாடி அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் சுமார் எட்டு மாதங்களில் 4.65 லட்சம் செலவில் முடிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 பணியாளர்கள் இதில் ஈடுபட்டனர். இந்த முழு கேமரா கார் திருச்சியில் உள்ள உள்ளூர் பணியாளர்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டது.
கேமராவின் மடிக்கக்கூடிய ரெக்சின் பொருள் இந்தக் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 10 நாட்களில் கேமரா காரை கன்டெய்னர் மூலம் சென்னை துறைமுகம் வழியாக சிங்கப்பூருக்கு அனுப்பப்படும். பெட்ரோலால் இயக்கப்படும் வகையில் இவ்வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் கேமரா கார் திருச்சியில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற பெருமை எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது திருச்சிக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது” என்றார்.