ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக உள்ள திமுகவைச் சேர்ந்தவர் காயத்ரி இளங்கோ. இவர் 2024 க்கான மாத காலண்டர் ஒன்றை அச்சிட்டு வெளியிட்டிருந்தார். அதில் குறிப்பாக 2024 ஜனவரி 30 ஆம் தேதி 'ஆர்.எஸ்.எஸ் மதவெறிக்கு உத்தமர் காந்தி படுகொலை' (1948) என்று அச்சிடப்பட்டிருந்தது.
'காந்தி படுகொலைக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தும் வேண்டுமென்றே உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சிக்கும் விதமாக, காழ்ப்புணர்ச்சியுடன் அமைதியை சீர்குலைத்து மதக்கலவரம் ஏற்படுத்தும் விதமாக காலண்டர் அச்சடித்து பொதுமக்களிடம் விநியோகம் செய்து வருகிறார்' என இந்து முன்னணியினர் தெரிவித்து வருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ் இயக்கமானது தேசபக்தி மிக்க நல்ல பண்புள்ள மனிதர்களை உருவாக்கும் அமைப்பாகும். இந்த அமைப்பின் நற்பெயரை சீர்குலைக்கும் வகையிலும், மக்களிடம் பிளவு ஏற்படுத்தி கலவரம் உருவாக வேண்டும் என்ற தீய எண்ணத்தில் காலண்டர் அச்சடித்து விநியோகம் செய்யும் காயத்ரி இளங்கோ என்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இந்து முன்னணி ஈரோடு மாவட்ட தலைவர் பா. ஜெகதீசன் தலைமையில் ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.