திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள பேக்கரியில் பிறந்த நாள் கேக் வாங்கி சாப்பிட்ட 5 வயது குழந்தைக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் குழந்தையின் உறவினர்கள் பேக்கரியை முற்றுகையிட்டனர்.
திருவண்ணாமலையில் மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள பேக்கரியில் தனது ஐந்து வயது குழந்தையின் பிறந்த நாளை கொண்டாட ஆதன் என்பவர் கேக் வாங்கி சென்றுள்ளார். கொண்டாட்டத்தில் வாங்கிய கேக்கை வெட்டி சாப்பிட்ட குழந்தைக்கு சிறிது நேரத்தில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து வாங்கிய கேக்கை நுகர்ந்து பார்த்த போது கெட்டுப் போனது தெரிய வந்தது. இதனால் கேக் வாங்கிய பெற்றோர் பேக்கரிக்கு சென்று புகார் தெரிவித்தனர். கடையின் பணியாளர்கள் சரியான விளக்கம் தராததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். “உயிர் அலட்சியமா? பணம் முக்கியமா? கேக் கெட்டுப்போச்சு” போன்ற கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் கெட்டுப்போனதாக கூறப்பட்ட கேக்கின் மாதிரியை பெற்றுக்கொண்டு போராட்டம் செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கடையையும் மூடினர்.