!['' By the time I came to Salem as Chief Minister ... '' - Chief Minister MK Stalin was upset!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Qvjct1qO-2LUuoBpWLgK02U9o6RwR_Z4YLkzWF0dpjE/1639208244/sites/default/files/inline-images/ZZZZZZZZZZ653.jpg)
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சேலத்தில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ஆ. ராஜா படத்திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் அமைச்சர் கே.என். நேரு ஆகியோர் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ''இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்த அமைச்சர் நேரு எந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தாலும் அதில் பிரம்மாண்ட வெற்றியைப் பெறுவதற்கான காரியங்களை ஆற்றுவார். அப்படி அவர் ஆற்றும் பணி சேலத்திலும் அடியெடுத்து வைத்திருக்கிறது. பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டது இந்த சேலம் மாவட்டம். திராவிட இயக்கத்தின் மூலம் சேலத்தை என்ன சொல்லி அடையாளம் காட்டலாம் என்று சொன்னால் திராவிட இயக்கத்தில் சேலம் பெரும்பங்கை பெற்றுள்ளது. நமது அறிஞர் அண்ணா கொண்டுவந்த தீர்மானம் 'அண்ணாதுரை தீர்மானம்' எனத் தலைப்பிட்டுவந்த நிலையில், அதுதான் நீதி கட்சியானது திராவிடர் இயக்கமாக பெயர் பெற்றதும் இந்த சேலத்தில்தான். அதையும் தாண்டி இன்னொரு சிறப்பும் சேலத்திற்கு உண்டு. திமுக தலைவர் கலைஞர் சில ஆண்டுகள் வாழ்ந்த ஊர்தான் சேலம். 1949 - 50களில் சேலம் கோட்டை பகுதியில் அபிப் தெருவில்தான் கலைஞர் வாழ்ந்தார். அப்படிப் பார்த்தால் என்னுடைய வீட்டிற்குதான் நான் வந்திருக்கிறேன். இதுதான் எனக்குப் பெருமை.
எத்தனையோ முறை பொதுக்கூட்டம், மாநாடு ஆகியவற்றில் பங்கேற்க வீரபாண்டியார் என்னைச் சேலத்திற்கு அழைத்து வந்துள்ளார். அதேபோல் ஆட்சியில் உள்ளபோது உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதல்வராக அரசு விழாவில் பங்கேற்க வந்துள்ளேன். ஆனால் இப்போது முதல்வராக வந்துள்ளேன். எனக்கு என்னவொரு ஏக்கம் என்றால், நான் முதல்வராக சேலம் வந்திருக்கும் நேரத்தில் வீரபாண்டியார் இல்லையே என்ற ஏக்கம், வருத்தம் என் உள்ளத்தில் பதிந்திருக்கிறது. வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்தபோது, இருந்த மாவட்டங்களிலேயே அதிகம் சலுகை பெற்ற மாவட்டம் என்று பார்த்தால் அதில் சேலம் மாவட்டமாகத்தான் இருக்கும்'' என்றார்.