நெல்லையின் பாளையை அடுத்த மணப்படை வீடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுருளிராஜன். ரியல் எஸ்டேட் காண்ட்ராக்ட், மற்றும் கார்களை வாங்கி விற்கிற பல தொழில்களை செய்து வருகிறார். தவிர சுருளி மீது கொலை முயற்சி வழக்கு ஒன்றும் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தனது பாதுகாப்பின் பொருட்டு வெளியே செல்கிற போதெல்லாம் தனது காரில் இரும்பு ராடு ஒன்றையும் வைத்திருப்பாராம்.
இந்நிலையில் நேற்று மாலை சுருளிராஜன் பாளையின் சட்டக்கல்லுரிப் பக்கம் காரில் வந்துகொண்டிருந்த போது அவரைத் தொடர்ந்து பின்னால் வந்த வாகனம் ஒன்று அவரது காரின் மீது மோதியிருக்கிறது. இதனால் அதிர்ச்சியான சுருளிராஜன் மோதியது எதுவென்று பார்ப்பதற்காக காரை விட்டு இறங்கியபோது, பைக்குகளில் வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை வெட்டியுள்ளது. இதனால் சுதாரித்த சுருளிராஜன் அந்தக் கும்பலிடமிருந்து தப்பியோடிய போது விடாமல் அவரைச் சாலையில் விரட்டிய கும்பல் அவரின் கழுத்து, தலை, தோள்பட்டைகளில் சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டுத் தப்பியோடியது. ரத்தச்சகதியில் கதறியபடி சரிந்த சுருளிராஜனின் உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்திருக்கிறது.
தகவலின் பேரில், மாநகர துணை போலீஸ் கமிசனரான ஆதர்ஷ் பஷேரா உதவி போலீஸ் கமிசனர் பிரதீப், உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுருளியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தியிருக்கிறார்கள். இதற்கு முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்டத்தில் தெரிய வந்திருக்கிறது. சுருளிராஜனுக்கும் அவரின் ஏரியாவைச் சேர்ந்த மற்றொரு குடும்பத்தினருக்குமிடையே கோயில்கொடை விழா மற்றும் சுருளிராஜன் மகளை பெண் கேட்டல் தொடர்பாக பகையும் இருந்துள்ளது.
தவிர அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அண்மையில் விபத்தில் இறந்திருக்கிறார். அது விபத்தல்ல. திட்டமிடப்பட்ட கொலை. பின்னணியில் சுருளிராஜன் தரப்பினர் இருக்கலாம் எனக் கருதியவர்கள் அவர் மீது போலீசில் புகாரும் கொடுத்துள்ளனர். குடும்பப் பிரச்சனையா என்று சந்தேகத்தின் அடிப்படையில் தனிப்படையினர், ஒருவரைப்பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.