திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகையன். திமுக சார்பில் திருவண்ணாமலை நகர் மன்ற தலைவர், திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாகவும் இருந்தவர். மறைந்த இவரின் பேரன் உறவு முறையை சேர்ந்தவர் தொழிலதிபர் தணிகைவேல். மதிமுக, தேமுதிக, திமுக என கட்சிகள் மாறியவர், தற்போது சென்னையில் சினிமா தயாரிப்பாளராகவும், பைனான்ஸ் பார்டியாகவும் இருந்து வருகிறார்.
கரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அடிதட்டு மக்கள் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல், உணவுக்கும் வழியில்லாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில் இதனைக்கேள்விப்பட்டு பல்வேறு தரப்பினரும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், உணவு என ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றனர். அந்த வரிசையில் தொழிலதிபர் தணிகைவேல், திருவண்ணாமலையில் தனது ஆதரவாளர்கள் உள்ள சமுத்திரம் காலனி, கல்நகர், தியாகி அண்ணாமலைநகர், பேகோபுரம் தெரு, செட்டிக்குளமேடு பகுதி, ஆடையூர், அத்தியந்தல் உட்பட பல பகுதிகளில் ஏழ்மையானவர்கள் யார் என்கிற பட்டியல் எடுத்துள்ளார்.
சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் கொண்ட பட்டியல் எடுக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான 10 கிலோ அரிசி, து.பருப்பு, க.பருப்பு, உ.பருப்பு, கடலை எண்ணெய், கடுகு, மிளகாய்தூள், குளியல்சோப்புகள், துணி துவைக்கும் சோப்பு என ஒரு குடும்பத்திற்கு தலா 600 ரூபாய் மதிப்புள்ள பையை பொதுமக்களுக்கு தந்துவருகிறார்.
இதனை நேரடியாக வழங்காமல் அந்தந்த பகுதிகளில் உள்ள இளைஞர் அமைப்புகள், நீர்துளி அமைப்புகள் போன்ற சமூக அமைப்புகள் மூலமாக சம்மந்தப்பட்டவர்களின் குடும்பத்துக்கு வழங்கிவருகிறார். முதல் கட்டமாக 1500 குடும்பங்களுக்கு வழங்கியவர், தற்போது இரண்டாவது கட்டமாக 1500 குடும்பங்களுக்கு ஏப்ரல் 4ந்தேதி முதல் வழங்கி வருகின்றார். மூன்றாவது கட்டமாக அடுத்தவாரம் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம் என்றார் நம்மிடம்.
ஒரு குடும்பத்துக்கு 600 ரூபாய் வீதம் 5 ஆயிரம் குடும்பத்துக்கு என 30 லட்ச ரூபாய் செலவில் அத்தியாவசிய பொருட்கள் தருவது ஆளும்கட்சியான அதிமுக, திமுக கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த காலங்களில் தனது ஆதரவாளர்களுக்கு வாரி வழங்கியது பெரும் சர்ச்சையானது. தற்போது பாஜகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்திவருகிறார் என்பது குறிப்பிடதக்கது.