சிதம்பரம் பேருந்து நிலைய கட்டிடம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பேருந்து நிலையத்தின் கட்டிடத்தில் ஏற்படும் பழுதுகளை அவ்வப்போது நகராட்சி நிர்வாகம் சரி செய்து வந்தது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பேருந்து நிலைய கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தலையில் பல தடவை அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
இந்த பேருந்து நிலையத்தில் உள்ள மேற்கூரையைச் சரி செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மேலும் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய பேருந்து நிலைய கட்டிடம் கட்ட வேண்டும் எனவும் அங்குள்ள வணிகர்கள் மற்றும் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பேருந்து நிலையத்தில் கடை நடத்தி வரும் வள்ளி என்ற பெண்மணியின் தலையில் பேருந்து நிலையத்தின் சிமெண்ட் காரை விழுந்து அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவருக்கு 7 தையல் போடப்பட்டுள்ளது. இதையறிந்த சிதம்பரம் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மற்ற பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவ்விடத்திற்கு செல்லாத வகையில் தடுப்புகளை ஏற்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.