சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக அரசு விரைவு பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 710 அரசுப் பேருந்துகளும் (TNSTC) இன்று (30.01.2024) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வட சென்னை மக்களின் வசதிக்காக மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கான பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மாதவரத்தில் இருந்து திருச்சிக்கு 18 நடைகளும், சேலத்திற்கு 18 நடைகளும், விருத்தாசலத்திற்கு 6 நடைகளும், கள்ளக்குறிச்சிக்கு 16 நடைகளும், விழுப்புரத்திற்கு 16 நடைகளும், கும்பகோணத்திற்கு 14 நடைகளும், சிதம்பரத்திற்கு 5 நடைகளும், நெய்வேலிக்கு 11 நடைகளும், புதுச்சேரி வழியாக கடலூருக்கு 5 நடைகளும், புதுச்சேரி வழியாக திண்டிவனத்திற்கு 10 நடைகளும், திருவண்ணாமலை செஞ்சி வழியாக 22 நடைகளும், போளூர் வந்தவாசிக்கு 20 நடைகள் என மொத்தம் 160 நடைகள் இயக்கப்பட உள்ளன.
ஏற்கனவே மாதவரத்தில் இருந்து திருப்பதிக்கு 90 நடைகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே இந்தப் பேருந்துகள் செயல்பாட்டிற்கு வருவதன் மூலம் மாதவரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் கிளாம்பாக்கத்திற்கு சென்று பேருந்து மாற வேண்டும் என்ற நிலை ஏற்படாமல், மாதாவரத்தில் இருந்தே பயணிகள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு வசதியாக இந்த பேருந்து சேவைகள் அமையும்” எனத் தெரிவித்தார்.