தமிழ்நாட்டில் அதிகமான விபத்துகள் மது போதையாலும், செல்போன்களாலும் தான் நடப்பதாக கூறப்படுகிறது. அதனால் வாகனங்கள் இயக்கும் போது செல்போன்களை தவிர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். ஆனாலும் மோட்டார் சைக்கிள் ஓட்டும் போது தலை கவசத்திற்குள் வைத்துக் கொண்டு செல்போனில் பேசிக் கொண்டே செல்வதும் அதிகரித்துள்ளது.
அதே போல கார், பஸ், லாரி போன்ற வாகனங்கள் இயக்கும் ஒரு சில ஓட்டுநர்கள் செல்போனில் பேசிக் கொண்டோ அல்லது முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை பார்த்துக் கொண்டு சாட்டிங் செய்வதும் வழக்கமாகிவிட்டது. இதனாலும் பல விபத்துகள் நடக்க காரணமாகிவிடுகிறது.
வெள்ளிக் கிழமை மதியம் சுமார் 1.30 மணிக்கு புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்த அரசு பேருந்து புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டைக்கு புறப்பட்டது. புதுக்கோட்டை நகரை கடந்த நிலையில் அந்த பேருந்து ஓட்டுநர் தனது செல்போனை எடுத்து சாட்டிங் தொடங்கினார். அதைப் பார்த்த நடத்துநர் பஸ்சில் போலிசார் வருகிறார் என்று ரகசியமாக சொன்னதால் செல்போன் மீண்டும் சட்டை பைக்குள் வைக்கப்பட்டது.
ஆலங்குடியில் போலிசார் இறங்கிய பிறகு தனது சட்டை பையில் இருந்து செல்போனை எடுத்த அரசு பஸ் ஓட்டுநர் சுமார் 20 கி.மீ புளிச்சங்காடு கைகாட்டியை கடந்தும் கூட செல்போனை வைக்கவில்லை. இடது கையில் ஸ்டியரிங்கை பிடித்துக் கொண்டு வலது கையில் செல்போனில் வாட்ஸ் அப்பில் சாட்டிங் செய்து கொண்டு 50 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பஸ்சை ஓட்டிக் கொண்டிருந்தார்.
பஸ் ஓட்டுநர் செல்போனில் சாட்டிங் செய்து கொண்டே பஸ்சை ஓட்டுவதை கவணித்த பயணிகள் தாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வரை அச்சத்துடனேயே பயணித்தனர். இப்படி செல்போன்களை பயன்படுத்திக் கொண்டே பஸ்களை இயக்கும் போது விபத்துகள் ஏற்பட்டால் என்ன செய்வது. ஒரு ஓட்டுநரை நம்பி எத்தனை உயிர்கள் உள்ளது என்பதை மறந்து செல்போனில் சாட்டிங் செய்வது நல்லதில்லை. புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழகம் முதலில் தங்கள் ஓட்டுநர்களுக்கு பஸ் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றனர் பயணிகள்.