மதுரையில் சாலையின் நடுவே நின்று தீக்குளித்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அந்த முதியவரைப் பெண் காவலர் ஒருவர் சாதுரியமாகக் காப்பாற்றிய சம்பவம் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
மதுரை மாநகர் காளவாசலில் உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இன்று மாலை சுமார் 6:30 மணி அளவில் அந்தப் பகுதிக்கு வந்த முதியவர் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றித் திடீரென தீ வைத்துக் கொண்டார். உடலில் பற்றி எரிந்த தீயுடன் சாலையின் நடுவே அவர் சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் போக்குவரத்துக் காவலர் மற்றும் அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஓடோடி வந்து முதியவரின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
உடனடியாக முதியவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் நடத்திய விசாரணையில், தீக்குளிப்பில் ஈடுபட்ட அந்த முதியவர் பெயர் அழகப்பன் என்பது தெரியவந்துள்ளது. எதற்காக அவர் தீக்குளிப்பில் ஈடுபட்டார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடனடியாகத் தீயை அணைத்து சாதுரியமாகச் செயல்பட்ட பெண் காவலரைப் பாராட்டி வருகின்றனர். இந்த தீக்குளிப்பு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.