ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த நெல்வாய் ஊராட்சியில் தென்னல், எஸ்.கொளத்தூர் ஆகிய பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்துக்கு சுற்றுப்புறத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் நெல்லை விற்பனைக்காக கொண்டுச் சென்றனர். ஆனால் அதிகாரிகள், இப்போது நெல் மூட்டைகளை வாங்க முடியாது, மேலிருந்து உத்தரவு வந்தால் தான் வாங்குவோம் என கூறியுள்ளனர். இதனால் ஏற்றி வந்த நெல் மூட்டைகளை திருப்பி எங்கே எடுத்து செல்வது என அங்கேயே இறக்கி அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்துவிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், கனமழையால் நெல் மூட்டைகள் நனைந்து பாழானது. மூட்டைகளில் இருந்தபடியே நெல் முளைவிட்டு வளர்ந்துள்ளது. முளைத்த நெல்லை நாங்கள் வாங்கமாட்டோம் என அதிகாரிகள் கைவிரித்துள்ளனர். இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சேதமடைந்த நெல் மூட்டைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் விவசாயிகள்.
இதுபோல் ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமல்ல, திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யார், வந்தவாசி, தெள்ளார், சேத்பட், ஆரணி, போளுர் பகுதியில் உள்ள அரசு நெல்கொள்முதல் நிலையங்களிலும் கொள்முதல் செய்யப்பட்ட, கொள்முதல் செய்ய வைத்திருந்த நெல்களை அதிகாரிகள் நனைய விட்டதால் அவைகள் முளைத்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய வந்த மத்திய ஆய்வுக்குழு அதிகாரிகள் விவசாயிகளிடம் குறைகளை கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகம் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்துக்கும் இந்த குழு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.