சென்னை மாநகர காவல் துறையின் கிழக்கு மண்டலத்தில் அண்மை காலமாக ஏராளமான இருசக்கர வாகனங்கள் திருடுபோனது. இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகள் மூலம் துப்பு துலக்கிய போலீஸார், தஞ்சாவூரைச் சேர்ந்த முகமது சபீக், கல்லூரி மாணவர் முகமது மொய்தீன் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த காஜா மொய்தீன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
கைதான முகமது மொய்தீன் சென்னை மண்ணடியில் ஒரு வழக்கறிஞரிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். கார் ஓட்டும் நேரம் போக மற்ற நேரங்களில், வழக்கறிஞரின் இருசக்கர வாகனத்தை திருட்டுத் தொழிலுக்குப் பயன்படுத்தி வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இவர்கள் மூவரும் சேர்ந்து, ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 18- ஆம் தேதி வரை சென்னை ராயப்பேட்டை, ஜாம் பஜார், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் 10 இரு சக்கர வாகனங்களை கள்ளச்சாவி போட்டு திருடிச் சென்றுள்ளனர்.
திருடிய மோட்டார் சைக்கிள்களை முகமது சபீக் மூலம் தஞ்சாவூர் கொண்டு சென்று ஆவணங்களை மாற்றி, மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளனர். புல்லட்டை ரூ.45 ஆயிரத்துக்கும், பல்சர் போன்ற பைக்குகளை ரூ.30 ஆயிரத்திற்கும் விற்பனை செய்து காசு பார்த்துள்ளனர் இந்த கும்பல் என விவரிக்கின்றனர் காவல் துறையினர்.