சென்னை பாரிமுனையில் அரண்மனைக்காரர் தெரு பகுதியில் பழமைவாய்ந்த 4 மாடிக் கட்டடத்தை சமீபத்தில் வாங்கிய ஒருவர், அதனைப் புதுப்பிக்கும் வகையில் அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த கட்டடம் சுமார் 100 வருடப் பழமையான கட்டடம் என்று கூறப்படுகிறது. கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை கட்டடத்தின் அடிப்பகுதி திடீரென சரிந்ததில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பேரிடர் மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், எட்டு மணிநேரத்திற்கு மேலாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் என பல்வேறு துறையைச் சார்ந்தவர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவ இடத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர். இந்நிலையில் கட்டட உரிமையாளர் பரத் சந்திரன் என்பவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அஜாக்கிரதையாக செயல்படுதல், பொதுச்சொத்தினை சேதப்படுத்துதல், கட்டடங்களை மறுசீரமைக்கும் போது அதற்கான உரிய அனுமதி பெறாமல் செயல்படுதல், உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுவது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.