கடலூர் மாவட்டம் ராமநத்தம் காவல் நிலைய தலைமைக் காவலராகப் பணிபுரிந்துவருகிறார் ஆனந்த ரட்சகன். இவரும் இவருடன் பணிபுரியும் சக காவலர் மாயவேல் ஆகிய இருவரும் தொழுதூர் கிராமத்தில் வசித்துவரும் சின்னசாமி என்பவரது மகன் மூர்த்தியை சந்திக்கச் சென்றனர். அவரிடம் லோக் அதாலத் வழக்கு சம்பந்தமான வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சம்மனை கொடுப்பதற்காகச் சென்ற காவலர்கள் இருவரும், தொழுதூர் சென்று மூர்த்தியை சந்தித்து சம்மனைக் கொடுத்துள்ளனர்.
அப்போது மூர்த்தியும் அவர் தம்பி ராஜா என்பவரும் சம்மன் கொடுப்பதற்காக வந்த காவலர்கள் இருவரையும் அசிங்கமாகத் திட்டி, அங்கு கிடந்த கழியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காவலர் ஆனந்த ரட்சகனுக்கு வலது கை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து காவலர்கள் இருவரும் அளித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து மூர்த்தி, அவரது தம்பி ராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். காவலர்களை சகோதரர்கள் இருவர் சேர்ந்து தாக்கிய சம்பவம் தொழுதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.