திருச்சி நீதிமன்ற வளாகத்திற்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இயங்கிவருகிறது. இங்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அதிகாரியாக சந்திரமோகன் (50) பணியாற்றிவருகிறார். இந்த அலுவலகத்தில் திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த சந்திரசேகர் (40) என்பவர், மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் வேனில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக டிரைவராக பணியாற்றிவந்தார். நேற்று (10.10.2021) மாலை 6 மணி அளவில் ஓட்டுநர் சந்திரசேகரிடம், வாகனத்தின் லாக்புக்கைக் கொண்டுவரும்படி சந்திரமோகன் கூறியுள்ளார்.
அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த டிரைவர், அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து அதிகாரியின் தலையில் ஓங்கி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதிகாரி, தலையில் பலத்த காயத்துடன் ரத்தம் சொட்டச் சொட்ட மயங்கிக் கிடந்தார். இதைப் பார்த்த ஊழியர்கள், அதிகாரி சந்திரமோகனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப் பதிவுசெய்து தப்பி ஓடிய டிரைவர் சந்திரசேகரை தேடிவருகிறார்கள்.