மதுரை நத்தம் சாலையில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
மதுரை நத்தம் சாலையில் மதுரை-செட்டிகுளம் இடையே 7.3 கிலோமீட்டர் தொலைவில், 694 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு தூணில் இருந்து மற்றொரு தூணுக்கு இணைக்கும் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் சிக்கி காயமடைந்துள்ளனர் என்ற முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்புத்துறை படையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேம்பால இடிபாட்டில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். கட்டப்பட்டுவந்த மேம்பாலம் இடிந்துவிழுந்த சம்பவம் அங்கு பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.