கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 20 இணையர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பாரிமுனையில் நடைபெற்றது. இதில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், ''9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் திருமணம் நடந்திட வேண்டும் என்று எனக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தியிருந்தார். இங்கு சக அமைச்சராக இருக்கக்கூடிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துடைய மகளுக்கு திருமணம் இந்தப் பகுதியிலிருந்து அப்படியே கிழக்குப் பகுதியில் நடைபெற இருக்கிறது. சக அமைச்சர் என்பதை விட பெஞ்சு மேட் என்று சொல்வார்களே அதுபோல் பக்கத்திலேயே இருக்கும் அமைச்சர் அவர். அவருடைய கோபத்திற்கு ஆளாகி விடக்கூடாது என அந்த திருமணத்திலும் கலந்துகொண்டு இந்த திருமணத்திற்கு வந்திருக்கிறேன்.
அழைப்பிதழில் போடப்பட்டுள்ளபடி எட்டு மணிக்கு திருமணம் நடைபெறவில்லை. சேகர்பாபு இட்ட கட்டளைப்படி அவர் சொன்ன 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் இங்கு வர முடியவில்லை. ஆனால் இங்கு பகுத்தறிவு திருமணம் சரியாக நடந்துள்ளது. சுயமரியாதை திருமணத்திற்கும், பகுத்தறிவு திருமணத்திற்கும் எப்பொழுதும் நேரம் காலமே கிடையாது. அதை சொல்வதால் ஆன்மீகத்தில் திளைத்திருக்கும் சேகர்பாபுவுக்கு உள்ளூர வருத்தம் இருந்தாலும்கூட நான் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை. சொல்ல வேண்டிய நிலைப்பாட்டில் இருக்கிறேன்.
மணமக்களுக்கு நான் ஒரு தைரியத்தை சொல்ல விரும்புகிறேன். நான் பகுத்தறிவு திருமணம் செய்து கொண்டவன். எந்த நேரம் என்று சொன்னால் ஞாயிற்றுக்கிழமை 4.30 - 6 மணிக்கு நான் கல்யாணம் செய்து கொண்டேன். யாரும் ஞாயிற்றுக்கிழமை 4.30 - 6 மணிக்கு கல்யாணம் செய்யமாட்டார்கள். கேட்டால் ராகு காலம் என்பார்கள். இதனால் எனக்கென்ன குழந்தை பிறக்காமல் இருந்ததா? எனக்கு சிங்கக்குட்டி போன்று இரண்டு மகன்கள். ஒருவர் என் குடும்பத்தின் கல்வி நிறுவனங்களை எல்லாம் பார்த்துக் கொள்கிறார். ஏனென்றால் என்னுடைய இரண்டு பிள்ளைகளையும் சேகர்பாபுவுக்கு தெரியும். சேகர்பாபு போன்று மணமக்கள் உழைத்து முன்னேறுங்கள். உழைப்புதான் உங்களை முன்னேற்றும். குடும்ப வாழ்க்கையில் முடிவெடுக்கும் இடத்தை பெண்களுக்கு கொடுங்கள். அடுப்படியில் என்ன இருக்கிறது. சமையல் பொருட்கள் என்னென்ன வேண்டும் என்பதையெல்லாம் பெண்கள் முடிவெடுக்க வேண்டும். அதனால் தான் நான் ப்ரொடியூசராக இருக்கும்போது ஒரு படம் எடுத்தேன். 'பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்' என்ற படத்தை எடுத்ததற்கு காரணமே பெண்கள் பேச்சைக் கேட்டதால் குடும்பம் உருப்படும் என்பதற்காகத்தான்'' என்றார்.