'எங்களுக்கு செங்கல்; உங்களுக்கு சொங்கோலா?' என கடலூர் எம்.பி எம்.கே.விஷ்ணுபிரசாத் பாராளுமன்றத்தில் ஆவேசமாக பேசியுள்ளார்.
அவரது உரையாவது, "சுகாதாரத்துறை மீதான விவாதத்தில் எனக்கு பேச வாய்ப்பு கொடுத்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பட்ஜெட்டில் ஏழை எளிய மக்கள் திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை.
நான் தேர்ந்தெடுக்கப்பட்ட கடலுார் தொகுதியில் சிறப்பு வசதிகளுடன் கூடிய மத்திய அரசு மருத்துவமனை ஒன்று கட்டித் தரவேண்டும். கடலூர் மாவட்டத்தில் மத்திய அரசு மருத்துவமனை இல்லை. இங்கு ஒரு மருத்துவமனை அமைத்துக் கொடுத்தால், அந்த மாவட்டத்தை சுற்றி இருக்கும் எல்லா மக்களுக்கு மிகுந்த பயனாக இருக்கும். உயர் தரமான சிகிச்சையை மக்கள் பெற்று பயன் அடைவார்கள். எனது கோரிக்கையை ஏற்று கடலூரில் ஒரு மத்திய அரசு மருத்துவமனை அமைத்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
நீட் தேர்வை நாங்கள் ஏன் கடுமையாக எதிர்க்கிறோம்? தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஏன் எதிர்க்கிறார்கள். மாநிலங்களில் இருக்கும் பள்ளிகளை மத்திய அரசு கட்டவில்லை. மாநில அரசுதான் கட்டுகிறது. ஆசிரியர்களை நியமித்து, அவர்களுக்கு ஊதியம் தந்து கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். ஆனால்,இங்கு மாணவர்களுக்கு இடையிலான நீட் போட்டி தேர்வு சமமானதாக இல்லை. அதனால், எங்கள் மாணவர்கள் வரமுடியவில்லை. இது ஜனநாயக விரோத போக்கு.
மத்திய அரசு அதிகாரத்தை எடுத்துக்கொள்ளாமல், மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும். மருத்துவ படிப்பில் சேர மாணவர்களை நாங்களே தயார் செய்ய வேண்டும். நீட் தேர்வு இல்லாமல், மாணவர் சேர்க்கை நடக்க வேண்டும். இந்திய மக்கள் தொகையில் 5 சதவீதம் உள்ள தமிழகத்தில் 11 சதவீதம் டாக்டர்கள் தமிழகத்தில்தான் இருக்கிறார்கள்.
வயது முதிர்ந்தவர்களுக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை. நான் ஒரு டாக்டர். மனநலம், ஆட்டிசம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு என்ன செய்யப் போகிறது. சிறப்பு திட்டம் ஏதாவது உள்ளதா? ஆட்டிசம் நோய்க்கு சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய்களுக்கும் இன்சூரன்ஸ் கவர் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் இருந்து செங்கோலை கொண்டு வந்து இங்கு வைத்திருப்பது எங்களுக்கு பெரும் சந்தோசம். அது தமிழகத்தின் சிறப்புக்களை பிரதிபலிக்கிறது. தமிழகத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கல் மட்டும் வைத்திருக்கிறீர்களே? இது நியாயமா? எங்களுக்கு செங்கல்; உங்களுக்கு மட்டும் செங்கோலா?'' என்று ஆவேசமாக பேசினார் எம்.கே.விஷ்ணுபிரசாத்.