![Sivakasi Nagaratchi Aluvalagam (1)(1)](http://image.nakkheeran.in/cdn/farfuture/GmO2s6bwh-dgGU3HZdB4ZfPI6Ae-wMmprASkCNA-Exk/1535746240/sites/default/files/inline-images/Sivakasi%20Nagaratchi%20Aluvalagam%20%281%29%281%29.jpg)
முகமது சிராஜ் சிவகாசி நகராட்சி ஆணையாளர் ஆவார். இன்று அவர் பணி ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், இன்று அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில், கீழக்கரை நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்தபோது, சொத்துவரி வசூலில் முறைகேடு செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது. அதன் அடிப்படையிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் என்பது சரிதானா?
8-6-2007 தேதியிட்ட G.O.(MS) – 144 அரசாணையில், அரசு ஊழியர்களைப் பணியிடை நீக்கம் செய்வது குறித்த விபரம் உள்ளது. இந்த அரசாணையின் பிரகாரம், அரசு ஊழியர் ஒருவரைப் பணியிலிருந்து ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிப்பது தவிர்க்கப்பட வேண்டும். அந்த அரசு ஊழியர் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே, அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
![Sivakasi Nagaratchi Aluvalagam (1)(1)](http://image.nakkheeran.in/cdn/farfuture/bjPFc-cm2goohQ2fJT0ooBuCB2iS8D8ebjw5mhj8iyA/1535746258/sites/default/files/inline-images/IMG-20180831-WA0158.jpg)
இந்த அரசாணைக்கு முரணாக, அரசு ஊழியர் ஒருவர் ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக, பணியிடை நீக்கம் செய்தால் அது சட்ட விரோதமாகும் என்று வழக்கு ஒன்றில் (W. P. NO - 5550/2016, Dated 1.8.2016, Natarajan Vs Adhi Thiravidar Welfare Department, Chennai and others (2016-4-TLNJ-CIVIL-132) மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனாலும், ஓய்வுபெறும் நாளில் நடவடிக்கை என்பது தொடரவே செய்கிறது.
லஞ்சம், முறைகேடு என மனசாட்சி இல்லாமல் செயல்படும் அரசு ஊழியர்களில் பலரும் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்குத் துளியும் அஞ்சாதவர்களாக அல்லவா இருக்கின்றனர்? உப்பைத் தின்றால், தண்ணீர் குடித்துத்தானே ஆகவேண்டும்.