திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலராக பரிமளா என்பவர் உள்ளார். இவர் தீபாவளியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஆதிதிராவிடர் நல விடுதி வார்டன்களும் தலா 10 ஆயிரம் தீபாவளியை முன்னிட்டு அதிகாரிக்கு கப்பம் கட்ட வேண்டும் என்கிற தகவல் பறந்துள்ளது.
அதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக வார்டன்கள் மாவட்ட அதிகாரியான பரிமளாவுக்கும், சூப்பிரண்ட், மேனேஜர் உட்பட பலருக்கும் வார்டன்கள் 2 ஆயிரம், ஆயிரம் என கப்பம் கட்டிவிட்டு சென்றுள்ளனர்.
இந்த தகவல் திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸாருக்கு தெரியவந்தது. அதனை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி தேவநாதன் தலைமையிலான போலிஸார், அக்டோபர் 24ந்தேதி மாலை 5 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அந்த அலுவலகத்துக்குள் நுழைந்து கதவுகளை மூடிவிட்டு சோதனையில் ஈடுப்பட்டனர்.
இதில் பரிமளாவின் டேபிள் ட்ராயரில் இரண்டு கவர்கள் இருந்துள்ளன. அந்த கவர்களின் மேல் எந்த விடுதி என பெயர் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு கவரிலும் 10 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. அதேபோல் அதிகாரிகள் ஒவ்வொருவரிடமும் அளவுக்கு அதிகமாக பணம் இருந்துள்ளது. அவைகளை கைப்பற்றினர் லஞ்ச ஒழிப்புத்துறையினர். இதுப்பற்றி அவர்களிடம் விசாரணை நடத்தினர், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.
இதுப்பற்றி துறையின் உயர்அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி அங்கிருந்து உத்தரவு கிடைத்தபின் வழக்கு தொடுக்கப்படும் என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறையினர்.